BAN vs AUS : நசும் அஹ்மத் பந்துவீச்சில் ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்!
வங்கதேச - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் பிலிப்பே ஆகியோர் களமிறங்கினர். மெஹதி ஹசன் வீசிய முதல் பந்திலேயே கேரி ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் வங்கதேச சுழலுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. மிட்செல் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் மேத்யூ வேட் 13 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 10 ரன்களைக் கூட தொடவில்லை.
இதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச தரப்பில் நசும் அகமது 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிஸூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதேசமயம் இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி, சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.