BAN vs NZ, 1st Test: சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட வில்லியம்சன்; நியூசிலாந்து பின்னடைவு!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து இருந்தது. தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும், ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று தொடங்கிய 2ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே வங்கதேச அணி எஞ்சிய 1 விக்கெட்டையும் இழந்து 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் 86 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளும், ஜேமிசன், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 21 ரன்களிலும், கான்வே 12 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரில் நிக்கோல்ஸ் 19 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க போராடியது. நிலைத்து விளையாடிய இந்த ஜோடியில் டேரில் மிட்செல் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் பிளண்டெல் 7 ரன்களில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். பின்னர் வில்லியம்சன்னுடன் கை கோர்த்த கிளென் பிலிப்ஸ் அணியை கவுரமான ரன்கள் எடுக்க உதவினார். இதில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் கிளென் பிலிப்ஸ் 42 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின் சதமடித்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் 104 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷ் சோதி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களை எடுத்துள்ளது. கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் 44 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணியில் கேப்டன் டிம் சௌதி மற்றும் கைல் ஜேமிசன் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.