BAN vs PAK: பாபர், ரிஸ்வான் அரைசதத்தால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன், சௌமியா சர்க்கார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்ததுடன், 42 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசி 69 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது. பின் 68 ரன்கள் எடுத்திருந்த ஷாகிப் அல் ஹசனும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
அதன்பின் 55 ரன்களில் பாபர் ஆசாம் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஹைதர் அலி ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின் இறுதிவரை போட்டியை எடுத்துச் சென்ற முகமது ரிஸ்வான் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நவாஸ் 45 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.