வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தாக்காவில் தொடங்கியது. தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா, வியான் முல்டா, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஐடன் மார்க்ரம் 6 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 30 ரன்னிலும், டேவிட் பெட்டிங்ஹாம், மேத்யூஸ் பிரீட்ஸ்கி ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கைல் வெர்ரைன் 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிய நிலையில், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த வியான் முல்டர் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேசவ் மஹாராஜும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் கைல் வெர்ரைன் 77 ரன்களுடனும், டேன் பீட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.