BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை 106 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது.
அந்தவகையில் தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாத்மான் இஸ்லாம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ஷாத்மான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக் 4 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 7 ரன்னிலும் என அடுத்தடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து மாஹ்முதுலுடன் இணைந்த அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் விளையாடி வந்தார். ஆனால் அவராலும் நீண்ட நேர நீடிக்க முடியவில்லை. இப்போட்டியில் 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போதே வங்கதேச அணியானது 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்முதுல் ஹசன் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுது களமிறங்கிய வீரர்களில் தைஜுல் இஸ்லாம் 16 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, வியான் முல்டா, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.