தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது.
அந்தவகையில் தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாத்மான் இஸ்லாம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ஷாத்மான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக் 4 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 7 ரன்னிலும் என அடுத்தடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து மாஹ்முதுலுடன் இணைந்த அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் விளையாடி வந்தார். ஆனால் அவராலும் நீண்ட நேர நீடிக்க முடியவில்லை.
இப்போட்டியில் 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் வங்கதேச அணியானது 60 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் மெஹிதி ஹசன் விக்கெட் வீழ்ந்ததும் இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது. அதன்படி வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்துள்ளது. இதில் தொடக்க வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாய் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.