இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் சென்னை வந்தடைந்தது.
அதன்பின் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா என நட்சத்திர வீரர்கள் தீவிர் பயிறியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் அவர்களும் பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 9 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வசப்படுத்துவார். இதில் தற்சமயம் அந்த அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் முதலிடத்தில் உள்ளார்.
அதன்படி தமிம் இக்பால் இதுவரை வங்கதேச அணிக்காக 387 போட்டிகளில் 448 இன்னிங்ஸ்களில் விளையாடி 15192 ரன்கள் எடுத்துள்ளார், அதேசமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் இதுவரை 463 போட்டிகளில் 512 இன்னிங்ஸ்களில் விளையாடி 15,184 ரன்களை எடுத்துள்ளார். இதனால் அவர் மேற்கொண்டு 9 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் தமிம் இக்பாலை பின்னுக்கு தள்ளி புதிய வரலாறு படைக்கவுள்ளார்.
இதுதவிர்த்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் 108 ரன்கள் எடுத்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6000 ரன்களை நிறைவு செய்வதுடன், வங்கதேச அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் முதல் வீரர் எனும் சாதனையையும் படைப்பார். அதன்படி இதுவரை 90 டெஸ்டில் 166 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள முஷ்ஃபிக்கூர் 39.01 என்ற சராசரியில் 5,892 ரன்களை எடுத்துள்ளார். இந்த பட்டியலில் தமிம் இக்பால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.