BAN vs NZ, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!

Updated: Sat, Dec 02 2023 11:12 IST
Image Source: Google

நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பின் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேசம் அணி 2ஆவது இன்னினஙஸை தொடங்கியது. அந்த அணி 26 ரன்கள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர்கள் மஹ்முதுல் ஹசன் 8 ரன்களுக்கும், ஸகிர் ஹசன் 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் 40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிக்கூர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து அசத்தினார்.  அவருக்கு துணையாக முஷ்பிக்கூர் ரஹிம் 67 ரன்களையும், மெஹிதி ஹசன் 50 ரன்களையும் சேர்க்க,  வங்கதேச அணி 338 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 332 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 11 ரன்களுக்கும்,  டெவான் கான்வே 22 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்களிலும், டாம் பிளெண்டல் 6 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 12 ரன்களுக்கும், கைல் ஜேமிசன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தில் டேரில் மிட்செல் 44 ரன்களுடனும், இஷ் சோதி 7 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் டேரில் மிட்செல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 58 ரன்களில் டேரில் மிட்செல் ஆட்டமிழக்க நியூசிலாந்தின் தோல்வியும் உறுதியானது. 

இறுப்பினும் அடுத்து களமிறங்கிய டிம் சௌதீ அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இஷ் சோதி 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மொத்தமாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் ஆட்டாநாயகான தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை