Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கத்தை தூக்கியது வங்கதேசம்!
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அரையிறுதியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷவால் சுல்ஃபிகர், அமீன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த முனிபா அலி 0, சதாப் ஷமாஸ் 13, நதாலியா 11 என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்ன வந்த கேப்டன் நிதா தார் 14, அலியா ரியாஸ் 17 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 64 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொர்னா அக்டர் 3 விக்கெட்டுகளையும், சஞ்சிதா அக்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா, ஷதி ராணி ஆகியோர் தலா 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷோபனா 5, கேப்டன் நிகர் சுல்தானா 2 ரன்களிலும், ரிது மோனி 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷொர்னா அக்டெர் - சுல்தானா கதுன் ஆகியோர் வங்கதேச அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது.