பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

Updated: Fri, Sep 29 2023 23:03 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் கௌகாத்தியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸும் 22 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த பதும் நிஷங்கா, 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 68 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சரித் அசலங்கா 18 ரன்களுக்கு, கேப்டன் தசுன் ஷனகா 3 ரன்களுக்கும், திமுத் கருணரத்னே 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த தனஞ்செயா டி சில்வா 55 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய துனித் வெல்லாலகே, துஷன் ஹெமந்தா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் லிட்டன் தாஸ் 61 ரன்களையும், தன்ஸ்த் ஹசன் 84 ரன்களையும் சேர்த்த நிலையிலும் விக்கெட்டை இழந்தனர். 

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தாஹித் ஹிர்டோய் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த மெஹிதி ஹசன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அரைசதம் கடந்த மெஹிதி ஹசன்  67 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 42 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை