PAK vs BAN, 1st Test: சதமடித்து மிரட்டிய ரிஸ்வான், ஷகீல்; வலிமையான நிலையில் பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயெ டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீல் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களைளுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தங்களது சதங்களைப் பதிவுசெய்து மிரட்டினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அகா சல்மானும் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 171 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஷாஹீன் அஃப்ரிடி 29 ரன்களைச் சேர்த்தனர். இதமூலம் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 421 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.