உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடருக்கான ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் காயம் காரணமாக விலகினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது மூட்டு பகுதியில் காயம் அடைந்தார்.
அவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் பொருட்டு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க மாட்டர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் , அவர் முழுமையாக குணமடைய சிறிது காலம் ஆகும் என்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.