BANW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது வங்காதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு சாரா ஃபோர்ஃப்ஸ் மற்றும் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபோர்ப்ஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டான் ஏமி ஹண்டர் 23 ரன்களிலும், ஓர்லா பிரென்டர்கஸ்ட் 27 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 52 ரன்களுடன் அவரும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் அர்லின் கெல்லி 18 ரன்களையும், அலனா தால்ஸல் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஃபஹிமா கதும் 3 விக்கெட்டுகளையும், சுல்தானா கதும், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு ஃபர்ஹானா ஹக் - முர்ஷிதா கதும் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதும் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபர்ஹானவுடன் இணைந்த ஷர்மின் அக்தரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 140 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷர்மின் அக்தர் 72 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 61 ரன்கள் எடுத்திருந்த ஃபர்ஹானா ஹக்கும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் கெப்டன் நிகர் சுல்தானா 18 ரன்களையும், சோபனா 7 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 37.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
Also Read: Funding To Save Test Cricket
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் அயர்லாந்து மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்மின் அக்தர் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஃபர்ஹானா ஹக் தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினர்.