UAE vs BAN, 2nd T2OI: தொடரை வென்றது வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்த வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியை வங்கதேச அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி மெஹிதி ஹசன் மிராஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிராஸ் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் அஃப்ஸல் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஸ்வான் - பசில் ஹமீத் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கேப்டன் ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பசில் ஹமீத் 42 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர்.
இறுதியில் ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் வங்கதேச அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தினர்.