சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!

Updated: Wed, Mar 12 2025 22:14 IST
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த வங்கதேச அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் வங்கதேசத்தின் மூத்த ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கும் மேலான அவரது குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் தனது ஓய்வு முடிவை மஹ்முதுல்லா தனது சமூக வலைதள பதிவின் மூலம் அறிவித்துள்ளார். அதன்படி அவரது பதிவில், “நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். எனக்கு எப்போதும் ஆதரவளித்த எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குறிப்பாக எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர், சிறுவயதிலிருந்தே எனது பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்த எனது சகோதரர் எம்தாத் உல்லா ஆகியோருக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

வங்கதேச அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமான மஹ்முதுல்லா இதுநாள் வரை அந்த அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 16 அரைசதங்கள் என 2914 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 32 அரைசதங்கள் என 5689 ரன்களையும், 82 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் 141 போட்டிகளில் 2444 ரன்களையும் 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக அந்த அணியின் அனுபவ வீக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாகவும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் மஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும்  தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை