BANW vs AUSW, 2nd ODI: வங்கதேசத்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் ஃபர்கான ஹாக் 7 ரன்களுக்கும், சோபனா 3 ரன்களுக்கும், முர்ஷிதா 5 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஃபஹிமா கதும், ரிதுமோனி, நஹிதா அக்தர் ஆகியோரை தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோஃபி மோலினக்ஸ் 10 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் அவர் 53 பந்துகளை டாட் பந்துகளாக வீசினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - ஃபோப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 05 ரன்களுக்கும், அலிசா ஹிலி 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய பெத் மூனி, தஹ்லியா மெக்ராத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 35 ரன்களுடனும், ஆஷ்லே கார்ட்னர் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 23.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.