BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ரன்கள் ஏதுமின்றியும், எல்லிஸ் பெர்ரி 2 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழக்க நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அலிசா ஹீலியும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தஹ்லியா மெக்ராத் 9 ரன்களுக்கும், பெத் மூனி 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த ஆஷ்லே கார்ட்னர் - சதர்லேண்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கார்ட்னர் 32 ரன்களுக்கும், அடுத்து வந்த ஜார்ஜியே வெர்ஹாம் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய சதர்லேண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய அலனா கிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 2 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சுல்தானா கதும் மற்றும் நஹிதா அக்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச மகளிர் அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்கானா ஹோக் ரன்கள் ஏதுமின்றியும், சோவன் மோஸ்டாரி 17 ரன்களுக்கும், முர்ஷிதா காதுன் 10 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா 27 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 36 ஓவர்களில் வங்கதேச மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.