‘எங்களுக்கும் ஓய்வு தேவை’ - பும்ரா வெளிப்படை!

Updated: Mon, Nov 01 2021 12:03 IST
Image Source: Google

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. 

இந்தத் தோல்விக்குப்பின் இந்தியஅணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், “உண்மையிலேயே சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. குடும்பத்தை பிரிந்து வாழ்கிறோம், 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம், பயோ-பபுள் சூழலில் இருப்பதால் எங்களுக்கு மீண்டுவர ஓய்வு தேவை.

நன்றாக விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தாலும், களத்தில் இறங்கும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாது. உங்கள் கட்டுப்பாட்டில் பல விஷயங்கள் நடக்காது. அனைத்துமே எந்தச் சூழலில் விளையாடுகிறோம், எப்போது விளையாடுகிறோம் என்பதில்தான் பட்டியலிடப்படுகின்றன.

நீண்டகாலமாகக் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது, பயோ-பபுள் சூழலில் இருப்பது போன்றவை வீரர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் எங்களை நல்லமுறையில் வைத்திருக்கவே பிசிசிஐ நிர்வாகம் முயன்று வருகிறது. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம், நேரம் கடினமானது. பெருந்தொற்று பரவி வருகிறது.

அந்த சூழலில் இருந்து பாதுகாக்க சில விஷயங்களுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனால், ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் செய்யும்போது, பயோபபுள் சூழல், மனரீதியான அழுத்ததில் சிலநேரம் சிக்கிவிடுகிறோம்.இதனால்தான் சில நேரங்களில் உங்கள் கட்டுப்பாட்டை மீறி சில சம்பவங்கள் நடக்கின்றன.

டாஸை நாங்கள் இழந்தபோதே, 2-வது இன்னிங்ஸில் ஆடுகளம் மாறிவிடும் என்பதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். ஆதலால், பந்துவீச்சாளர்களை பாதிக்காத வகையில் நல்ல ஸ்கோரை அடிக்கக் கோரி பேட்ஸ்மேன்களிடம் கேட்டிருந்தோம். அது தொடர்பாகவும் ஆலோசித்தோம்.

Also Read: T20 World Cup 2021

பவுண்டரி தொலைவு அதிகம் என்பதால், தொடக்கத்திலேயே பவர்பிளே ஓவரிலேயே எங்கள் பேட்ஸ்மேன் அடித்து ஆட முயன்றனர். ஆனால், நியூஸிலாந்து வீரர்கள் ஸ்லோ-பால்களை அதிகம் வீசி ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை விளையாடுவது கடினமாக இருந்தது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை