பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் பிரௌன் மற்றும் நேதன் மெக்ஸ்வீனி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். அதன்பின் ஜோஷ் பிரௌன் 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார். 2வது ஓவரில் களத்திற்கு வந்த மெக்ஸ்வீனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று அடித்து ஆடினார். அதிரடியாக விளௌயாடி அரைசதம் அடித்த மெக்ஸ்வீனி, 51 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.
இதையடுத்து 225 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் ஃபிலிப் 13 பந்தில் 27 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 24 பந்தில் 41 ரன்களும் அடித்து, கடின இலக்கை விரட்டுவதற்கான சரியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அதன்பின்னர் ஜோர்டான் சில்க்கும் 23 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹைடன் கெர் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அவுட்டானதால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
இதன் விளைவாக, சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.