பிபிஎல் 2023: டக்வொர்த் லுயிஸ் முறையில் பிரிஸ்பேன் ஹீட்வெற்றி!

Updated: Fri, Jan 27 2023 18:25 IST
BBL 12: Brisbane Heat win by 8 runs on DLS method! (Image Source: Google)

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்துவரும் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிரௌன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான உஸ்மான் கவாஜா, அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய நிலையில், வெறும் 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரும், சமகாலத்தின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராகவும் திகழும் உஸ்மான் கவாஜா,  தான் வெறும் டெஸ்ட் வீரர் மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த இன்னிங்ஸை அபாரமாக ஆடினார். 55 பந்தில் 10 பவுண்டரிகள் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 94 ரன்களை விளாசி உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். 

அவருடன் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்னஸ் லபுசகானேவும் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். லபுஷேன் 48 பந்தில் 73 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. சிட்னி தண்டர் தரப்பில் கிறிஸ் கிரீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 36 ரன்களைச் சேர்த்திருந்தார்.

இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டி டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கட்டத்திற்கு சென்றது. அதில் சிட்னி தண்டர் அணி, பிரிஸ்பேன் ஹீட் அணியைக் காட்டிலும் 8 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை