பிபிஎல் 12: பெர்த் ஸ்காச்சர்ஸுக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் முன்னேறின.
பெர்த் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜோஸ் பிரௌன் - சாம் ஹீஸ்லெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் பிரௌன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, 34 ரன்களைச் சேர்த்திருந்த ஹீஸ்லெட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் ஜிம்மி பெர்சன் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வீனியும் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் 14 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் என 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. பெர்த் அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், மேத்யூ கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.