பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஹாபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே ஹாபர்ட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோ கிளார் (4) மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் (2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பின் 3ஆம் வரிசையில் இறங்கிய கார்ட்ரைட் நிலைத்து விளையாடிய அரைசதம் அடித்தார்.
இப்போட்டியில் 47 பந்துகளை சந்தித்த கார்ட்டர் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வெப்ஸ்டர் 27 ரன்களும், ஜேம்ஸ் செய்மர் 7 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே அடித்தது .
அபாரமாக பந்துவீசிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டனும் ஃபாஸ்ட் பவுலருமான நேதன் எல்லிஸ் 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் பென் மொக்டர்மோட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் காலெப் ஜுவெல் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதிரடி அரைசதம் அடித்த ஜுவெல் 44 பந்தில் 70 ரன்கள் அடித்து 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின் 3ஆம் வரிசையில் இறங்கிய ஸாக் கிரௌலி 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 14.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் டிம் டேவிட் (3), டி ஆர்சி ஷார்ட்(8), மிட்செல் ஓவன்(0), ஃபஹீம் அஷ்ரஃப் (0), ஆசிஃப் அலி(9) ஆகியோர் அடுத்தடுத்து மளமளவென ஆட்டமிழக்க, 14 ரன்களுக்கு அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்தது ஹோபர்ட் அணி.
இருப்பினும் அந்த அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய லியாம் ஹாட்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.