BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர் வெதர்லட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த மேட் ஷார்ட் - கிறிஸ் லின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேட் ஷார்ட் அரைசதம் கடக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் லின் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து 53 பந்துகளில் 84 ரன்களை விளாசியிருந்த மேட் ஷார்ட்டும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆடம் ஹோஸ் தனது பங்கிற்கு 22 பந்துகளில் 40 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. சிக்சர்ஸ் அணி தரப்பில் சீன் அபேட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் குர்டிஸ் பேட்டர்சன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின் ஜோஷ் பிலிப் 26 ரன்களிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 24 ரன்களோடும், ஜோர்டன் சில்க் 36 ரன்களையும் சேர்த்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் ஹென்றி டொர்டன் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர்.
இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.