பிபிஎல் 2023: டாம் ரேஜர்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!

Updated: Tue, Jan 03 2023 17:57 IST
Image Source: Google

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று மெல்பர்னில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியில் மார்டின் கப்டில், ஷான் மார்ஷ் மற்றும் ஹார்வி ஆகிய மூவரும் தலா 32 ரன்கள் அடித்தனர். கப்டில் 27 பந்தில் 32 ரன்களும், ஷான் மார்ஷ் 35 பந்தில் 32 ரன்களும், ஹார்வி 23 பந்தில் 32 ரன்களும் அடித்தனர். ஆரோன் ஃபின்ச் ஒரு ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மற்ற வீரர்கள், டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட்டின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து  141 ரன்களுக்கு சுருண்டது.  மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட்  இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி, தொடக்கம் முதலே டாம் ரோஜர்ஸிடம் விக்கெட்டுகளை இழந்தது. ஜோ கிளார்க்(0), தாமஸ் ரோஜர்ஸ்(1), வெப்ஸ்டெர் (8) ஆகிய மூவரையும் வீழ்த்திய டாம் ரோஜர்ஸ், 20 ரன்கள் அடித்த கார்ட்ரைட்டையும் வீழ்த்தினார். 

அதன்பின்னர்  நிக் லார்கின் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி 48 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் டாம் ரோஜர்ஸ் 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 

இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டாம் ரோஜர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை