பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குயீன்ஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சார்லி வகிம் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோஷ் பிரௌன் - கேப்டன் மெக்ஸ்வீனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தின. இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய ஜோஷ் பிரௌன் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வீனி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின் 10 பவுண்டரி, 12 சிக்சர்கள் என 140 ரன்களைச் சேர்த்திருந்த ஜோஷ் பிரௌன் அட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ ரென்ஷா, மேக்ஸ் பிரையண்ட், பால் வால்டர், பெர்சன் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. அடிலெய்ட் தரப்பில் லியாட் போப், பொய்ஸ், டேவிட் பெய்ன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் மேத்யூ ஷார்ட் 19, டி ஆர்சி ஷார்ட் 7, ஜேக் வெதர்லெட் 8 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த தாமஸ் கெல்லி - ஹாரி நெல்சன் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தாமஸ் கெல்லி 41 ரன்களுக்கும், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஹாரி நெல்சன் 50 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.5 ஓவர்களிலேயே அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன், கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஜோஷ் பிரௌன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.