பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்!

Updated: Sat, Jan 13 2024 14:58 IST
பிபிஎல் 13: ஆண்ட்ரூ டை அபார பந்துவீச்சு; பிரிஸ்பேனை வீழ்த்தியது பெர்த்! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் எஸ்கின்ஸி - வைட்மேன் களமிறங்கினர்.

இதில் வைட்மேன் 7 ரன்களிலும், எஸ்கின்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஹார்டியும் 9 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஜோஷ் இங்லிஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த லௌரி எவான்ஸ் - கூப்பர் கன்னொலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் எவான்ஸ் 28 ரன்களையும், கன்னொலி 35 ரன்களையும் சேர்த்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிக் ஹாப்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் மைக்கேல் நேசர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஜோஷ் பிரௌன் - ஜிம்மி பெர்சன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிம்மி பெர்சன் 42 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 3, மேத்யூ ரென்ஷா 1, பால் வால்டர் 9, மைக்கேல் நேசர் ரன்கள் ஏதுமில்லை, மேக்ஸ் பிரையண்ட் 29, ஸேவியர் பார்ட்லெட் 3 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் பிரிஸ்பேன் ஹீட் அனி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளையும், லான்ஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை