பிபிஎல் 13: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Fri, Dec 08 2023 20:10 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் பிரபல டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிட்ன்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - ஜோஷ் பிலீப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிலீப் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஸ்மித்துடன் இணைந்த கேப்டன் ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிக்ஸ் 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 61 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் சில்க் 26, எட்வர்ட்ஸ் 14 ரன்களை எடுக்க  இன்னிங்ஸ் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் நிக் மேடின்சன் 6, ஜோ கிளர்க் 6, ஜோர்டன் காக்ஸ் ரன்கள் ஏதுமின்றி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜேக் ஃப்ராசர் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃப்ராசர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஆரோன் ஃபிஞ்சும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வில் சதர்லேண்ட் அதிரடியாக விளையாடிய 30 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களைக் குவித்தாலும், மறுபக்கம் பேட்டர்கள் ரன்களை சேர்க்க தவறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி அணி தரப்பில் பென் துவர்ஸுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை