பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பெேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதனையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு டி ஆர்சி ஷார்ட் மற்றும் ஒல்லி போப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி போப் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ஒரு ரன்னிலும், ஜேக் வெதர்லெட் 8 ரன்னிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரர் டி ஆர்சி ஷார்ட் 22 ரன்களுக்கும், பின்னர் களமிறங்கிய கேப்டன் அலெக்ஸ் ரோஸ் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேமி ஓவர்டன், லியாம் ஸ்காட், தொர்ண்டன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் ஜோடி சேர்ந்த பிரண்டன் டக்கெட் - கேமரூன் பொய்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராண்டன் டக்கெட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், கேமரூன் பொய்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர்கள் என 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. பெர்த் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு மேத்யூ ஹர்ஸ்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஹர்ஸ்ட் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி 2 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஃபின் ஆலனுடன் இணைந்த கூப்பர் கன்னொலி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஃபின் அலன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய் நிலையில், 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து கூப்பர் கன்னொலியுடன் இணைந்த கேப்டன் ஆஷ்டன் டர்னரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கூப்பர் கன்னொலி 3 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.