பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தண்டர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிக்ஸர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சிக்ஸர்ஸ் அணிக்கு ஜேக் எட்வர்ட்ஸ் - கர்டிச் பேட்டர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எட்வர்ட்ஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் கர்டிஸ் பேட்டர்சன் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் பிலீப் 16 ரன்களுக்கும், கேப்டன் ஹென்றிக்ஸ் 29 ரன்களுக்கும், ஷா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோர்டன் சில்க் மற்றும் பென் துவார்ஷூயிஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய துவார்ஷூயிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹெய்டன் கெரும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் சில்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழபிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. தண்டர் அணி தரப்பில் வெஸ் அகர், டாம் ஆண்ட்ரூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிட்னி தண்டர் அணிக்கு ஜேசன் சங்கா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜேசன் சங்காவும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ கில்க்ஸும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் ஒர்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹுக் வெய்ப்ஜென், கிறிஸ் கிரீன் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் பில்லிங்ஸ் 42 ரன்களையும், நாதன் மெக்ஆண்ட்ரூ 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்து நடப்பி பிபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.