பிபிஎல் 2021: பில்லிங்ஸ் அதிரடியில் பெர்த்தை வீழ்த்தியது தண்டர்!
ஆஸ்திரேலியாவின் டி20 கிரிக்கெட் லீக்காக பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - ஜேசன் சங்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 67 ரன்களையும், ஜேசன் சங்கா 56 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பெர்த் அணியில் பெட்டர்சன், இங்லிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ அரைசதம் கடந்து நம்பிக்கையளித்தார். அவருக்கு உறுதுணையாக ஆண்ட்ரூ டை 44 ரன்களை சேர்த்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. தண்டர் அணி தரப்பில் நாதன் மெக்கண்ட்ரூ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.