பிபிஎல் 2023: மேத்யூ ஷார்ட் சதத்தால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!

Updated: Thu, Jan 05 2023 18:27 IST
Image Source: Google

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் இடையேயான போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் மெக்டெர்மோட் மற்றும் காலெப் ஜுவெல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 88 ரன்களை குவித்து கொடுத்தனர். ஜுவெல் 25 பந்தில் 54 ரன்களும், மெக்டெர்மோட் 30 பந்தில் 57 ரன்களும் அடித்தனர்.

அதன்பின்னர் ஜாக் க்ராவ்லியும் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய க்ராவ்லி 28 பந்தில் 54 ரன்களை விளாச, டிம் டேவிட் 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்களை அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ரியான் கிப்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி செர்ந்த மேத்யூ ஷார்ட் - கிறிஸ் லின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 64 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கிறிஸ் லின் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆடம் ஹோஸும் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ ஷார்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் 19.3 ஓவர்களில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ ஷார்ட் 59 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 100 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை