தமிம் இக்பால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் - நஸ்முல் ஹசன்
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டன் தமிம் இக்பால் சமீபத்தில் அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிம் இக்பாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தமிம் இக்பால் விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. 2019 முதல் வங்கதேச அணி விளையாடிய 23 டி20 ஆட்டங்களில் 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால் இடம்பெற்றிருந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதுகுறித்து பேசிய அவர், “தமிம் இக்பால் எங்களுடைய முதல் தேர்வாக இருந்தார். உலகக் கோப்பை அணியில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் இத்தொடரிலிருந்து அவர் விலகுவதாக சொன்ன பிறகு, அணியில் அவர் பெயர் இல்லை. தமிம் இக்பால் இன்னும் பல உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவார். இது துணிச்சலான முடிவு. உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவது அவ்வளவு சுலபம் அல்ல. எல்லோருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆசையாக இருக்கும். இப்போது விளையாடுபவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, தான் விளையாடினால் அது நியாயமாக இருக்காது என எங்களிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.