பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அதிகபட்சமாக இம்முறை தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
பளுதூக்குதலில் மீராபாய் சானு(வெள்ளி), பேட்மிண்டனில் பி.வி.சிந்து(வெண்கலம்), மகளிர் குத்துச்சண்டையில் லவ்லினா(வெண்கலம்), ஆடவர் ஹாக்கி அணி(வெண்கலம்), மல்யுத்தத்தில் ரவி குமார் தாஹியா(வெள்ளி), மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா(வெண்கலம்), ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா(தங்கம்) ஆகியோர் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த வீரர், வீராங்கனைகளுக்கு அந்தந்த வீரர்கள் சார்ந்த மாநிலங்களின் அரசுகள் பரிசுத்தொகைகளை அறிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அவரவர் வென்ற பதக்கத்திற்கேற்ப பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
அதன்படி, தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடியும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. அதேசயம் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடியை பரிசுத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.