பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
பிசிசிஐ ஒவ்வொரு வருடமும் வருடாந்திர ஒப்பந்தம் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வது வழக்கம். ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி, ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி, பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி, சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடி என்ற ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சம்பளம் கொடுக்கப்படும்.
அதன்படி 2022/23 ஆண்டுகளுக்கான வீரர்களின் ஒப்பந்தம் பட்டியல் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த பட்டியலில் இருந்து இந்திய டெஸ்ட் அணி வீரர்களான முன்னாள் துணை கேப்டன் அஜிங்கியா ரகானே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இருவரும் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் எதிர்கால டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா பார்க்கப்பட்டு வருகிறார். அவர் தற்போது சி பிரிவில் இருக்கிறார். இவருக்கு ப்ரமோஷன் கொடுத்து பி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணிக்கு அபாரமாக செயல்பட்ட, சி பிரிவில் இருக்கும் வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் நல்ல ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.
மேலும் ஏ+ பிரிவில் இருக்கும் வீரர்கள் பொதுவாக மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தனர். ஏ பிரிவில் இருக்கும் வீரர்கள் மூன்றுவித போட்டிகளிலும் விளையாடுவர்.
குறைந்தபட்சம் இரண்டுவித போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவர். பி பிரிவில் இருக்கும் வீரர்கள் இரண்டுவித போட்டிகளில் விளையாடுவர். சி பிரிவில் இருக்கும் வீரர்கள் ஏதேனும் ஒருவித போட்டியில் விளையாடக் கூடியவர்களாக இருப்பர். சூரியகுமார் யாதவ் சி பிரிவில் இருந்து பி பிரிவிற்கு மாற்றப்பட உள்ளார். ஏனெனில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
சுப்மன் கில் சி பிரிவில் இருக்கிறார். அவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால், பி பிரிவிற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.