ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பேஷ் லீக் தொடரில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக டாஸ் வீசுவதற்கு நாணயத்திற்கு பதில் பேட் வீசப்படும். இது போன்ற மாற்றங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ தற்போது சிறப்பான முடிவு ஒன்று எடுத்துள்ளது.
அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன் எப்போதும் 11 வீரர்களை அணி கேப்டன் தேர்வு செய்வார். ஆனால் எதிர்பார்த்தது போல் ஆடுகளம் செயல்படவில்லை என்றால் இந்த வீரருக்கு பதில் வேறு வீரரை தேர்வு செய்திருக்கலாமே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழும். இதனால் போட்டி சில சமயம் ஒரு அணிக்கு சாதகமாக மாறிவிடும். இதில் எந்த ஒரு விறுவிறுப்பும் இருக்காது.
இதனை மாற்ற தற்போது பிசிசிஐ சிறப்பான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன்பே நான்கு மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும். இதில் களத்தில் விளையாடும் ஏதாவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக நான்கு வீரர்களின் யாராவது ஒருவர் பயன்படுத்தப்படுவார். இதேபோன்று இம்பேக்ட் பிளேயர் என்ற விதியை பிசிசிஐ கொண்டு வரவுள்ளது.
அதாவது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் என்று ஒருவரை போட்டி தொடங்குவதற்கு முன்பே அணி கேப்டன்கள் முடிவு செய்ய வேண்டும். அதன்படி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிளேயிங் லெவனில் அவர் இல்லாத போதும் சூழலுக்கு தேவை என்றால் அந்த இம்பேக்ட் வீரரை பந்து வீசவோ பேட்டிங் செய்யவோ கேப்டன் அழைக்கலாம். இந்த விதி கேப்டன்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் கிடைத்து இருக்கிறது. காரணம் கேப்டன்கள் கால சூழலுக்கு ஏற்ப இந்த வீரர்களை தேர்வு செய்யலாம்.
உதாரணத்திற்கு ஒரு அணி 15 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.அப்போது ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக வந்து விளையாடினால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு நட்சத்திர வீரரை களத்திற்கு அழைத்து விளையாட வைக்கலாம்.
இதே போன்று பந்துவீச்சிலும் யாராவது ஒரு வீரர் அதிக ரன் கொடுப்பது போல் தெரிந்தால், இந்த இம்பாக்ட் பிளேயரை பந்து வீச பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.