ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!

Updated: Sat, May 29 2021 21:45 IST
Image Source: Google

சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (மே 29) நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்தியாவில் பரவி வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் கிரிக்கெட் தொடர்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பயோ பபுள் சூழலைத் தாண்டி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  கடந்த 4ஆம் தேதி ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன.

தற்போது இந்தியாவில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எஞ்சிய ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து விடலாம் என்று திட்டமிட்டு பிசிசிஐ அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து, கரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் வீரர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியளித்தபடி இன்னும் வழங்கப்படவில்லை. அந்த தொகையை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை