அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் ஐபிஎல்?

Updated: Thu, Jun 02 2022 12:56 IST
Image Source: Google

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எட்டு அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் இன்று பிரம்மாண்ட வளர்ச்சிபெற்று கோடிகள் புரளும் விளையாட்டுத் தொடராக 10 அணிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

எனினும் மகளிர் ஐபிஎல் தொடர் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பிசிசிஐயிடம் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018 – 2020காலக்கட்டத்தில் மூன்று அணிகள் கொண்ட மகளிர் டி20 சேலஞ்ச் என்ற தொடரை பிசிசிஐ நடத்தியது.

ஆனால் தொடர்ந்து அப்போட்டிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாறாக மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின்படி,  இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசியின் ஒப்புதலுக்குப் பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியின்போது கூட்டம் நடைபெற்றதாகவும், மார்ச் - ஏப்ரல் அல்லது செப்டம்பர்- அக்டோபர் காலக்கட்டத்தில் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கு பதிலாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போன்ற வாரியங்களுடன் பிசிசிஐ இதுகுறித்து கலந்தாலோசித்த நிலையில், மகளிருக்கான முதல் சீசனில் ஆறு அணிகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மகளிர் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த உள்ளதாக முன்னதாக அறிவித்ததையடுத்து, மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டிய அழுத்தத்தில் பிசிசிஐ இருந்து வந்தது.

மேலும், இந்தியாவில் மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கு பதிலாக மகளிர் ஐபிஎல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை