இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
கடந்த 2016-17ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தபோது, கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகுவதற்கு விராட் கோலி பல்வேறு விதத்தில் காரணமாக இருந்தார், அவருடன் மோதலில் ஈடுபட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அப்போது பயிற்சியாளராக கும்ப்ளேவை நியமித்தது. ஆனால், கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். 2019 ஒருநாள் உலகக்கோப்பையின் போதே அவரது பயிற்சிகாலம் முடிவடைந்த நிலையில், கோலியின் ஆதரவால் மேலும் 2 ஆண்டுகள் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருன் ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இப்போது பிசிசிஐ தலைவராக கங்குலி இருப்பதால்,மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே கொண்டுவரப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கும்ப்ளேயும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு லட்சமணும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். இருவரையும் பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அணுகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறிய விஷயத்தில் இப்போது திருத்தம் செய்ய வேண்டும். கோலியின் அழுத்தம், நெருக்கடியால்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார் என்பது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கும் தெரியும். இனிமேல் அது முன்னுதாரணமாக இருக்ககூடாது.
ரவிசாஸ்திரி பதவிக்காலம் டி20உலகக் கோப்பையுடன் முடிந்தபின், தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின், டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாகத் தெரிவித்துள்ளதும், மீண்டும் அணிக்குள் கும்ப்ளே பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்புக் கதவு திறக்கப்படுவதற்கும் பல்வேறுதொடர்புகளைக் காட்டுவதாக நம்பப்படுகிறது.