IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத்திலும், 2ஆவது போட்டி 9 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 12ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
அதேபோல் டி 20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கட்டாக்கிலும், 2ஆவது போட்டி 18 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 20ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் 6 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கொரோனா உச்சத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
போட்டிகளை நடத்த 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 3 இடங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அகமதாபாத்தை தவிர மற்ற இடங்களை குறைக்க ஆலோசிக்கப்படுகிறது.
இதன் மூலம் அணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு கடினமான சூழ்நிலை. நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம். சரியான நேரத்திதில் நாங்கள் முடிவுகளை எடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.