தீபக் சஹாருக்கு மீண்டும் காயமா? - பிசிசிஐ மறுப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியினர் அனைவரும் துபாய்க்கு சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தேர்வாகியுள்ளார்.
ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார். தீபக் சஹாருக்குக் காயம் ஏற்பட்டதால் தான் இந்த ஏற்பாடு எனச் செய்திகள் வெளியாகின. ஆனால் பிசிசிஐ தரப்பு இத்தகவலை மறுத்துள்ளது. குல்தீப் சென், வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத்தான் தேர்வாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தீபக் சஹாருக்குக் காயம் எதுவும் இல்லை, அவர் மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் 25 வயது குல்தீப் சென்னை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 7 ஆட்டங்களில் விளையாடிய குல்தீப் சென், 8 விக்கெட்டுகளை எடுத்தார்.