IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ

Updated: Wed, Feb 02 2022 13:25 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸுடன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிகிறது.

அடுத்து இலங்கை அணி இந்தியா வந்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25ஆம் தேதியும், 20 ஓவர் தொடர் மார்ச் 16ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், மொகாலியிலும், 20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கரோனா பாதுகாப்பு காரணமாக முதலில் 20 ஓவர் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மசாலா மற்றும் மொகாலியில் மட்டும் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லக்னோவில் போட்டி நடத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

மேலும் 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

இந்தியாவில் இதற்கு முன்பு பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்துள்ளன. 2019 நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடந்த பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் தோற்கடித்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை