மீண்டும் சூடுபிடிக்கும் கேப்டன்சி நீக்கம் குறித்த சர்ச்சை!
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டாரா? அல்லது விலகினாரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடுபிடித்தது.
டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் ஒட்டுமொத்த வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா புதிய கேப்டனக சேர்க்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2 அணிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருந்தால் நன்றாக இருக்காது. இதனால்தான், கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கினோம். டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது, விலக வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். இருப்பினும் கோலி விலகினார் எனக்கூறியிருந்தார்.
ஆனால் விராட் கோலி இதற்கு மறுப்பு தெரிவித்தார். கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்கூட்டியே யாரும் என்னிடம் இதுகுறித்து பேசவில்லை. டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, யாரும் என்னிடம் விலக வேண்டாம் எனக் கூறவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் விராட் கோலிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க கங்குலி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதாவது டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் கூறவில்லை எனப் பேசிய கோலி, அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என சவுரவ் கங்குலி நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுருந்ததாக தெரிகிறது. இதற்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.
ஆனால் கங்குலியின் செயலை அறிந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தற்போதைக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பினால், அது பிசிசிஐயில் பெரிய பிரச்சினையை உருவாக்கும். எனவே தயவு செய்து எந்தவித நடவடிக்கையும் வேண்டாம் எனக்கூறியுள்ளார். இதன் காரணமாக தான் கங்குலி மௌனம் காத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலி - கங்குலி இடையே பனிப்போர் நடந்து வருவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.