இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு!

Updated: Sat, Mar 09 2024 17:21 IST
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது.  பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியால் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் ஜோ ரூட்டை தவிர மற்ற பேட்டர்கள் அரைசதம்  கூட அடிக்காமல் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி 195 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “எங்கள் விளையாட்டு வீரர்களுக்கான'டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டமானது 2022-23ஆம் சீசனில் இருந்து தொடங்குகிறது” என தெரிவித்துள்ளார். 

 

மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள புகைப்படத்தின் அடிப்படையில், தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிசிசிஐ-யின் புதிய அறிவிப்பின் படி, ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டி நடக்கிறது என்றால், 50 சதவிகித போட்டிக்கும் குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படாது. அதாவது 9 டெஸ்ட் போட்டியில் 4 போட்டிக்கோ அல்லது அதற்கு குறைவாக விளையாடினால் ஊக்கத்தொகை அளிக்கப்படாது. 

ஒருவேளை ஒரு சீசனில் 50 சதவிகித டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக வீரர்கள் விளையாடும் பட்சத்தில், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.30 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் மட்டுமே வழங்கப்படும். பிளேயிளெங் லெவனில் இடம்பிடிக்காத வீரர்களுக்கு வழக்கம் போல் ரூ.15 லட்சம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும். 

மேலும் ஒரு சீசனில் 75 சதவிகித டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடினால் அதாவது 7 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வீரர்கள் பிளேயிங் லெவனில் விளையாடும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியமாக ரூ.45 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். அதெசமௌஅம் பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்களுக்கு ரூ.22.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை