சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் யார்? விசாரணையில் பிசிசிஐ!

Updated: Mon, Feb 21 2022 15:04 IST
Image Source: Google

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 

அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் சஹா உள்ளதால் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சஹாவிடம் இதுபற்றி விசாரித்துவிட்டு மேலும் வேறு எந்த வீரராவது இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஆளானார்களா என்பது குறித்தும் விசாரிக்கவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை