மற்றவர்களை காட்டிலும் ஹசரங்கா ஆபத்தானவர் - முத்தையா முரளிதரன்!
டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலககோப்பை தொடர் நெருங்கிக் கொண்டு வருவதால் இந்த தொடரில் எந்த அணி பலமான அணியாக இருக்கும்..? எந்த இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்..? எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்படுவார்.?? எந்த பந்துவீச்சாளர் எதிரணி பேட்ஸ்மின்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்..? என்பது போன்று பல்வேறு விதமான தகவல்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில்,நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில், இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருந்த அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா., எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார் என்று இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஹசரங்கா மிகச்சிறந்த டி20 பந்து வீச்சாளராகவுள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளில் இந்த இளம் வீரர் மிகச் சிறந்த முறையில் விளையாடியுள்ளார், மற்ற சுழற்பந்துவீச்சாளர்களை விட ஆஸ்திரேலிய மைதானத்தில் இவருடைய லெக்-ஸ்பின் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, இவர் பந்து வீச வந்து விட்டால் அனைவரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாக இருப்பதால் நிச்சயம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.