இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி - ஷபாஸ் அகமது!

Updated: Wed, Aug 17 2022 12:57 IST
'Being Called up is a Dream Come True' - Shahbaz Ahmed (Image Source: Google)

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நாளை துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்காக கேஎல் ராகுல் தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 

ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் போன்ற சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

மேலும் இந்த இளம் இந்திய அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வாய்ப்பினை பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த அணியில் இருந்து வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அவருக்கு பதிலாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இளம்வீரர் ஷபாஸ் அகமது முதல் முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஷபாஸ் அகமது நெகிழ்ச்சியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது அனைத்து வீரர்களுக்குமே இருக்கும் பெரிய கனவு. அந்த வகையில் என்னுடைய கனவு தற்போது நிஜமாகியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் நான் பெங்கால் அணிக்காக விளையாடி வந்தேன். பெங்கால் அணி எனக்கு முழு ஆதரவையும் அளித்து என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்தது. பெங்கால் அணிக்காக நான் எவ்வாறு சிறப்பாக விளையாடினேனோ அதேபோன்று இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என தெரிவித்துள்ளார். 

தற்போது 27 வயதான இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷபாஸ் அகமது பந்துவீச்சு மட்டும் இன்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை