அதிவேகமாக ஆயிரம் ரன்கள்; இங்கிலாந்துக்காக பென் டக்கெட் சாதனை!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
அதன்படி, இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அந்த அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானுடன் இணைந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகமது நபி ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்ததன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இந்தா இமாலய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து ஒலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த பென் டக்கெட் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர்38 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 1000 ரன்களைப் பூர்த்தி செய்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி அவர் தனது 21ஆவது இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களைக் கடந்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையையும் சமன்செய்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக கெவின் பீட்டர்சன், டேவிட் மாலன் மற்றும் ஜொனதன் டிராட் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களது 21ஆவது இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளது.
இதுதவிர்த்து உலகளவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களைக் குவித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் பென் டக்கெட் பெற்றுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் ஃபகர் ஸமான் 18 இன்னிங்ஸிலும், இந்திய அணியின் ஷுப்மன் கில், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் தலா 19 இன்னிங்ஸிலும் தங்களது 1000 ரன்களை பூர்த்தி செய்து இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள்
- 18 இன்னிங்ஸ் - ஃபகார் ஜமான் (பாகிஸ்தான்)
- 19 இன்னிங்ஸ் - சுப்மன் கில் (இந்தியா)
- 19 இன்னிங்ஸ் - இமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்)
- 21 இன்னிங்ஸ் - பென் டக்கெட் (இங்கிலாந்து)
- 21 இன்னிங்ஸ் - பாபர் ஆசம் (பாகிஸ்தான்)
- 21 இன்னிங்ஸ் - குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)
- 21 இன்னிங்ஸ் - ஜொனாதன் ட்ராட் (இங்கிலாந்து)
- 21 இன்னிங்ஸ் - டேவிட் மாலன் (இங்கிலாந்து)