ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இங்கிலாந்து அணியும், பயிற்சி போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணியும் தயாராக உள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒரே ஒரு போட்டி மட்டும் தற்போது நடைபெறுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நியூசிலாந்தை எந்த மனநிலையுடன் வீழ்த்தினோமோ, அதே மனநிலையுடன் களமிறங்குவோம். வேறு அணிக்கென்று தனி மனநிலையெல்லாம் கிடையாது.
மிகவும் கடுமையாக தாக்கதான் போகிறோம். எப்படிபட்ட அணியென்று எல்லாம் பார்க்கவே மாட்டோம். நான் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் வெற்றியை தாண்டி வீரர்களின் மனநிலையை தான் மாற்ற விரும்பினேன். தேசத்திற்காக விளையாடுகிறோம் என்பதையும், அனுபவித்து ஆட வேண்டும் என்பதையும் கூறினேன். அதற்கான முடிவு நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக கிடைத்தது.
நியூசிலாந்துடனான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 55- 6 என்ற நிலைக்கு சென்றோம். எனினும் அங்கிருந்து 360 - 10 என்ற நிலைக்கு ஸ்கோர் எட்டியது. இதுதான் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கு உதாரணம். ஆட்டத்தில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எங்களால் நல்ல நிலைமைக்கு செல்ல முடியும் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.