அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது. அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. கடைசியில் 370 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இதை துரத்திய இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தார். இருப்பினும் இலக்கை எட்ட முடியாமல் ஆட்டமிழந்தார். 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பேசிய ஸ்டீவ் ஸ்மித், “ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதுபோல, நடைபெற்று விடுமோ? என்கிற எண்ணம் இருந்தது. அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ். எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றி விடுவார். சற்று கிறுக்குத்தனம் பிடித்தவரும் கூட. 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சிக்கலை ஏற்படுத்தக் கூடியவர்.
இன்றைய போட்டியிள் சிறந்த இன்னிங்சை விளையாடினார். ஒரு பக்கம் நின்று கொண்டு இலக்கை எட்டுவதற்கு போராடினார். அவரை அவுட் எடுக்கும் வரை எதுவும் உறுதி இல்லை என்று கருதினோம். ஸ்கொயர் திசையில் நின்று கொண்டு பந்தை பிடிப்பது சற்று கடினம். எப்போது எந்த வேகத்தில் வரும் என்று கணிப்பதும் சற்று கடினம். இதனால் ஸ்டோக்ஸ் அடித்த கேட்ச்சை நான் தவறவிட்டுவிட்டேன். அதனால் மிகப்பெரிய பின்னடைவையும் சந்தித்தோம். இருப்பினும் கடைசியில் வெற்றியில் முடித்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
முதலில் இன்னிங்சில் பவுலிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை என்பதால் பேட்டிங்கில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்காக யாரேனும் ஒருவர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது இருந்தது. அந்த பங்களிப்பை நான் கொடுத்ததில மகிழ்ச்சி. ஒட்டுமொத்தமாக மிகச்சிறந்த கிரிக்கெட் இந்த போட்டியில் அமைந்தது.
இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் சில இடங்களில் நன்றாக பவுன்ஸ் ஆகிறது. சில இடங்களில் பவுன்ஸ் ஆகாமல் எந்த உயரத்திற்கு வரும் என்று கணிக்க முடியாமல் போகிறது. இதனால் சில தவறான ஷாட்கள் விளையாடும் பொழுது எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறது. சில நல்ல ஷாட்கள் விளையாடும் பொழுது ஆட்டம் இழக்கவும் நேரிடுகிறது. ஆகையால் இதுதான் இந்த போட்டியில் சிக்கலை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.