தீப்தி சர்மா ரன் அவுட் விவகாரம்; ஹர்ஷா போக்லே கருத்துக்கு ஸ்டோக்ஸ் பதில் கருத்து!

Updated: Sat, Oct 01 2022 21:33 IST
Image Source: Google

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். போட்டி முடிந்து ஒரு வாரகாலம் கடந்த போதும், அந்த விக்கெட் மீதான சர்ச்சை மட்டும் நீங்காமலேயே உள்ளது.

இங்கிலாந்து வீரர்கள், மற்றும் ஊடகங்கள் பலரும் தீப்தி சர்மாவுக்கு எதிராக விமர்சனங்களை அடுக்கி வந்தன. இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று ஹர்ஷா போக்லே ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ஐசிசி விதிமுறைப்படி விக்கெட் எடுத்ததற்கு கூட இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சிப்பது கவலையை தருகிறது எனக்கூறியிருந்தார்.

மேலும் இங்கிலாந்துடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற ஆணவம் இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது. இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க புத்தி இன்னும் இங்கிலாந்து பின்பற்றி வருகிறது எனவும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கொடுத்திருந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “அந்த மன்கட் விக்கெட் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை கூறுவதில் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது, மன்கட் குறித்து உலகின் நிறைய நாடுகளிடம் இருந்தும் கருத்துக்கள் வரலாம். அதற்காக இங்கிலாந்தின் கலாச்சாரம் குறித்து பேசுவது தவறு” எனக்கூறியிருந்தார்.

 

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸின் கருத்தே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அதாவது ஐசிசியில் ரன் அவுட் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ள சூழலில், ஸ்டோக்ஸ் அதை எப்படி மன்கட் என கூறுகிறார் என சர்ச்சை வெடித்துள்ளது. 

மன்கட் என்பவர், இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவரின் பெயரை இப்படி சர்ச்சைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. அதனை ரன் அவுட் என்றே கூற வேண்டும் என ஸ்டோக்ஸுக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை